சென்னை,
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- இந்தியாவில் 2005-ம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக் கல்லையும் தகர்த்து எறிந்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். மகளிரின் உரிமைகளுக்காக போராடுவதிலும், வென்றெடுப்பதிலும் தமிழகத்தின் முன்னோடி பா.ம.க. தான். அந்த வகையில் மகளிருக்கு சொத்துரிமை வழங்குவதில் உள்ள தடைகளை அகற்றி உள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பா.ம.க. சார்பில் நான் வரவேற்று பாராட்டுகிறேன்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- 1929-ம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களை போன்று பெண்களுக்கு சம சொத்து உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார். சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு, பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதன்மை பாத்திரம் உண்டு. 1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.