தமிழக செய்திகள்

அறுவைசிகிச்சை எதுவும் இல்லாமல் இதய வால்வு பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சை அப்பல்லோ டாக்டர் சாதனை

அறுவைசிகிச்சை எதுவும் இல்லாமல், இதய வால்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு ‘மிட்ரா கிளிப்' என்ற சிறப்பு சிகிச்சையை மேற்கொண்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியின் இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் சாதனை படைத்துள்ளார்.

சென்னை,

இதயத்தில் இருக்கும் மிட்ரல்' வால்வில் ஏற்படும் பிரச்சினை காரணமாக இதயம் செயலிழப்பதோடு, இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை நோயாளிகள் எதிர்கொள்கின்றனர்.

இதற்கு அறுவைசிகிச்சை மூலம் மட்டுமே சிகிச்சை மேற்கொண்டுவந்த நிலையை மாற்றி, அந்த பிரச்சினைகளுக்கு மிட்ரா கிளிப் என்ற சிறப்பு சிகிச்சை முறையை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி செய்து வருகிறது.

அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் பலருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. கடைசியாக 41 வயது மதிக்கத்தக்க ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த விவசாயி காமேஸ்வர் ராவுக்கு இந்த சிகிச்சை நடந்திருக்கிறது.

காமேஸ்வர் ராவ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று மூச்சுத்திணறல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிலும், தெலுங்கானாவின் ஐதராபாத்திலும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.

காமேஸ்வர் ராவை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் பரிசோதித்து, அவருக்கு இந்த சிறப்பு சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார். சிகிச்சை முடிந்த 5-வது நாளான நேற்று சிகிச்சை பெற்ற காமேஸ்வர் ராவுடன், டாக்டர் சாய் சதீஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதயத்தில் மிட்ரல் வால்வில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு அறுவைசிகிச்சைதான் செய்யவேண்டும் என்று இருந்தநிலை மாறி, தற்போது மிட்ரா கிளிப் என்ற சிறப்பு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தொடை நரம்பு வழியாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

2003-ம் ஆண்டில் இந்த நோய்க்கு இதுபோல் முதல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 2013-ம் ஆண்டு ஐரோப்பா நாடுகளில் இந்த சிகிச்சை முறை கொண்டுவரப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டு அமெரிக்காவிலும், இந்தியாவில் 2019-ம் ஆண்டிலும் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சிகிச்சையை 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்தில் செய்துவிடலாம். இதுபோன்ற வால்வு பிரச்சினையில் எந்த அளவுக்கு மோசமான நிலையில் வந்தாலும், அவர்களை இந்த சிகிச்சையின் மூலம் சரிசெய்துவிடமுடியும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும். கொஞ்ச நேரம்கூட நடக்கமுடியாமல் சோர்ந்துவிடுவார்கள்.

சாதாரணமான அறுவைசிகிச்சைக்கும், இந்த முறையிலான சிகிச்சைக்கும் செலவு வகையில் பார்க்கும்போது சற்று அதிகம்தான். ஆனால் இதில் ரிஸ்க் குறைவு. நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் இதுபோல் செய்யப்பட்டு இருக்கின்றன.

எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை நம்பிக்கையை கொடுக்கும். இதய பிரச்சினையில் முடங்கிப்போனவர்களை மறுநாளே பேட்மிண்டன் விளையாடும் அளவுக்கு இந்த சிகிச்சை மீட்டு கொண்டு வருகிறது. அப்படி பார்க்கும்போது, எதிர்காலத்தில் இந்த சிகிச்சை முறையின் தேவை அதிகமாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து அப்பல்லோ ஆஸ்பத்திரிகள் குழுமத்தின் துணை செயல்தலைவர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், 3 மாதங்களுக்கும் மேலாக இதய மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு மிட்ரா கிளிப் சிகிச்சை மூலம் சிகிச்சையளித்து இதன் பலன்களை நிரூபித்துள்ளோம் என்றார்.

இந்தியாவில் மிட்ரா கிளிப் சிகிச்சை முறையை முதன் முதலில் செய்து வெற்றிகண்டவர் டாக்டர் சாய் சதீஷ். கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் நடந்த இதுபோன்ற சிகிச்சைகளில் 75 சதவீத சிகிச்சையை இவர்தான் செய்திருக்கிறார். அவ்வாறு இவரிடம் சிகிச்சை பெற்ற 41 வயது முதல் 89 வயதுடையவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு அதன்பிறகு ஒருமுறைகூட இதய செயலிழப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு