தமிழக செய்திகள்

முதலாவது மந்திரி சபை கூட்டத்திலேயே கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

முதலாவது மந்திரி சபை கூட்டத்திலேயே கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி அறிவித்துள்ளார். பா.ம.க.வின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் 1970-ம் ஆண்டுகளில் இந்திராகாந்தி ஆட்சியின் போதே நீர் மேலாண்மை வல்லுனர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் ஆகும். ஆனால், அப்போது அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் கூட நடத்தப்படவில்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு இப்போது செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இந்தியாவின் வற்றாத நதிகளில் ஒன்றான கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இது தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டிய காவிரி ஆற்று நீரின் அளவைவிட 6 மடங்கு அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நதிகள் இணைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு குறைந்தது 200 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக இருக்கும்.

இது தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேளாண் தேவையை மட்டுமின்றி, குடிநீர் தேவையையும் நிறைவேற்றும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழகத்தின் நன்மைக்கான இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். மத்தியில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நரேந்திரமோடி அரசு மீண்டும் அமையவிருக்கும் நிலையில், அதன் முதலாவது மந்திரி சபை கூட்டத்திலேயே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இந்தத் திட்டம் காய்ந்த பூமியான தமிழகத்தை பசுமை பூமியாக மாற்றும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பா.ம.க.வும் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை