சென்னை,
இயற்கை பேரழிவுகளை விரைவாக கண்காணிப்பது, பூமியில் உள்ள பெரிய நிலப்பகுதிகளின் நிகழ்நேர படங்களை பெறுவது, விவசாய பயன்பாடு, வனவியல், கனிமங்கள், நீர்நிலைகள், பனிப்பாறைகள் மற்றும் பேரழிவு எச்சரிக்கை, சூறாவளி கண்காணிப்பு, மேக கூட்டங்கள் மற்றும் இடியுடன் கூடிய மழை கண்காணிப்பு போன்றவற்றை துல்லியமாக அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து உள்ளது.
இது பூமியை துல்லியமாக கண்காணிக்கும் என்பதால் முதல் முறையாக வானில் உள்ள கண் என்று இந்த செயற்கைகோள் அழைக்கப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.
இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
கவுண்ட்டவுன்
தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-வது ராக்கெட், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படும் 79-வது ராக்கெட்டாகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரோயோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 8-வது ராக்கெட் என்ற பெருமையை இது பெறுகிறது. இந்த ராக்கெட் பூமியின் மேல்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் செயற்கைகோளை நிலை நிறுத்துகிறது.
தற்போது ராக்கெட் வடிவமைக்கும் இடத்தில் இருந்து ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதனுடைய செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.