சென்னை,
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தர முத்திரை வழங்கும் மையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் முடங்கியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள தங்க நகை வணிகம், இந்த புதிய விதியால் மேலும் பாதிப்பை சந்திக்கும் என நகை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மத்திய அரசின் இந்த புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை (ஆகஸ்ட் 23) முற்பகல் 11.30 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டு அடையாள போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.