கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அங்குள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கிருந்து சுமார் 90 சத்துணவு முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த உணவகத்திற்கு 5 ஆயிடம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் பல்வேறு கடைகளில் அதிக செயற்கை நிறமூட்டிய கார வகை உணவுகள், கெட்டுப்போன உணவு வகைகள், குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், 8 கடைகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் 14 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.