சென்னை,
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் எரித்தது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல், யார் யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்களை கட்சியில் இருந்து நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் இனி இருக்காது என்று நான் நம்புகிறேன்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே எந்த மோதலும் இல்லை. ஐ.டி. பிரிவில் இருப்பவர்கள், பக்குவப்படாமல் இருப்பவர்கள் ஏதோ கருத்துகள் கூறினார்கள். அதற்கு நாங்களும் பதில் சொல்லி விட்டோம். எங்கள் கூட்டணி தொடருகிறது அதாவது, அகில இந்திய ரீதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. இது தொடரும்.
கடை நடத்தும் ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவை விட என் மனைவி 1,000 மடங்கு ஆளுமை மிக்கவர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளது, அவருடைய தனிப்பட்ட கருத்து. யாரும், ஜெயலலிதாவை போல் ஆக முடியாது. மீண்டும் அவரை போல் பிறக்கவும் முடியாது. இதில் நான் கருத்து சொல்ல முடியாது. எங்கள் தலைவருக்கு நிகரானவர் உலகிலும், தமிழகத்திலும் கிடையாது.
ஓ.பன்னீர்செல்வம் வசம் கட்சியே இல்லை. அவர் ஒரு கடை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி ஒருவரை கட்சியில் இருந்து நீக்க முடியும். 99 சதவீத நிர்வாகிகள் இடைக்கால பொதுச்செயலாளரை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலாவை தவிர மற்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால், தாயுள்ளத்தோடு நிச்சயம் கட்சி அரவணைக்கும்.
சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தபிறகும், அ.தி.மு.க. பெயருடன் கூடிய 'லெட்டர் பேடை' ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது முறையற்ற செயல் கட்சியின் சட்டக்குழு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஆன்லைன் ரம்மி தடைவிவகாரம்
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், ஆன்லைன் ரம்மியை முழுமையாக தடை செய்ய வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதில் பலர் இறந்துள்ளனர். எங்கள் ஆட்சி காலத்தில் இதுதொடர்பாக ஒரு சட்டம் கொண்டுவந்து, அதை ஐகோர்ட்டு தடை செய்தது. புதிய ஆட்சி வந்ததும், மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பும்போது, கவர்னர் சில விளக்கங்கள் கேட்டார்.
24 மணி நேரத்தில் இந்த அரசு பதில் அளித்தது. அவசர அவசரமாக என்ன பதில் அளித்தார்கள்?. மீண்டும் கவர்னர் திருப்பி அனுப்பியிருக்கிறார். மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம் இல்லை. இதற்கான மசோதா இயற்றும் அதிகாரம் இல்லை என்ற தகவல்தான் பத்திரிகை மூலம் பார்த்தேன்.
இந்த சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குதான் இருக்கிறது என்று ஏன் இந்த அரசு சொல்லவில்லை.
நான் பேரவை தலைவராக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'இந்த மசோதாவுக்கு திருத்தம் கொண்டு வந்து, உடனடியாக தயார் செய்து கவர்னருக்கு அனுப்புவதுதான் நல்ல விஷயம்'.
இவ்வாறு அவர் கூறினார்.