தமிழக செய்திகள்

ஆவடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி பலி - மேலும் 3 பேர் படுகாயம்

ஆவடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஆவடியை அடுத்த கோவில் பதாகை கலைஞர் நகர் 14-வது தெருவைச் சேர்ந்தவர் ரோஜா (வயது 64). இவருடைய மகன் சங்கர் ராஜ் (41). இவர் ஆவடி ராஜீவ்காந்தி நகரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி அனிதா (36). இவர்களுக்கு கீர்த்திகா (11) என்ற மகளும், கவுதம் (10) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு ரோஜா, சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இது தெரியாமல் அடுப்பை பற்ற வைத்ததால் குப்பென்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் வீட்டில் இருந்த ரோஜா, அவருடைய மகன் சங்கர்ராஜ், அவருடைய மகள் கீர்த்திகா, மகன் கவுதம் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். அனிதா, மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி, ஏ.சி. உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்தது. 4 பேரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஆவடி, எச்.வி.எப், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் தீயில் உடல் கருகிய ரோஜா உள்பட 4 பேரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகன் சங்கர்ராஜ், பேத்தி கீர்த்திகா, பேரன் கவுதம் ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கியாஸ் சிலிண்டரில் இருந்த ரெகுலேட்டரை 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கி மாட்டினர். ஆனால் அது சரியாக பொருந்தாமல் தொடர்ந்து கியாஸ் கசிந்துள்ளது. இதனை கவனிக்காமல் ரோஜா, சமையல் செய்ய கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் அவர் பலியாகிவிட்டது தெரிந்தது.

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை