தமிழக செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் மாதத்துக்குள் நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலை வருகிற ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்ததால், சங்க நிர்வாக பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், தனி அதிகாரி சேகர் பதவி உயர்வு பெற்று பணிமாறுதலாகி சென்றுவிட்டதால், புதிய தனி அதிகாரியாக மஞ்சுளா என்பவரை மேலும் ஒரு ஆண்டுக்கு நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறினார். இதற்கு விஷால் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். அந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக தனி அதிகாரி செயல்படுவார் என்று கூறினார்.

தேர்தல் அதிகாரியாக தனி அதிகாரி நியமிப்பதை ஏற்க முடியாது என்று விஷால் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற ஜூன் 30-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இந்த தேர்தலை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாகவும் உத்தரவிட்டார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்