தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று மு.க.ஸ்டாலின் சாவால் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் இன்று கொடுமையான ஆட்சி நடக்கிறது. விலைவாசி விஷம்போல் ஏறிவருகிறது. அண்மையில் பால் விலையை உயர்த்தி உள்ளனர். அதுமட்டுமின்றி மின் இணைப்பு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

காய்கறி விலையும் ராக்கெட் போல் உயர்ந்து வருகிறது. வெங்காயம் விலையை கேட்டாலே கண்களில் கண்ணீர் வருகிறது. விலைவாசியை கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தான் நடந்துகொண்டு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சாலை வசதியும் இல்லை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடையாது. மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சிக்கு அடிபணிந்து நடக்கிற ஆட்சியாகத்தான் அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. தமிழக அரசின் எல்லாத்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, தமிழகத்தில் சாதாரணமாக விற்கப்படுகிறது. இதை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. ஆட்சியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் மாமூல் செல்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டுவர முடியவில்லை. ஆனால் எடப்பாடி ஆட்சியில் மத்திய அரசு சுலபமாக நீட் தேர்வை கொண்டுவந்து திணித்துவிட்டது. இதனால் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வை ஏற்கக் கூடாது என்று 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து குரல் கொடுத்தோம். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று ஆட்சியாளர்கள் யாரும் சொல்லவில்லை.

அமைச்சர் சி.வி.சண்முகம் நாங்கள் நீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம், தீர்மானம் அனுப்பிவைத்துள்ளோம் என்று தெரிவித்தார். ஆனால் உண்மை என்னவெனில் எப்போது தீர்மானம் அனுப்பினார்களோ? அப்போதே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதை இவர்கள் வெளியில் சொல்லவில்லை. இதை மூடிமறைத்த பாவம் சி.வி.சண்முகத்தை தான் சாரும்.

எடப்பாடி பழனிசாமி அப்பட்டமான பொய் பேசி சென்றுள்ளார். கோதாவரி-காவிரியை இணைப்போம், நந்தன் கால்வாய் திட்டம், ஏரி குளங்களை நிரப்புவோம், எல்லா வீட்டுக்கும் தண்ணீரை கொடுப்போம் என்று அப்பட்டமான பொய் சொல்லி இருக்கிறார். ஏரிகளை தூர்வாருகிறோம் என்கிறார், ஏரியை தூர்வாராமலே தூர்வாரியதாக கணக்கெடுத்து கொள்ளையடித்து இருக்கும் கூட்டம் தான் அவர்கள்.

நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர். அந்த வெற்றியிலும் 1.1 சதவீதம் தான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். ஜெயலலிதா இறந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். பின்னர் என்னை பார்த்து சிரித்ததாலேயே அவருக்கு பதவி போனது. அதன்பின் சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார்.

இவ்வாறு வந்துவிட்டு, ஸ்டாலின் என்ன மக்களால் வந்தாரா, விபத்தின் காரணமாக தலைவராகிவிட்டார் என்று அப்பட்டமான பொய் பேசி வருகிறார். இப்போது நான் ரெடி, நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க மக்களிடம் வந்து நில்லுங்கள். உங்களால் தேர்தலில் ஜெயித்து வரமுடியுமா?

இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும், பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால் உதயசூரியனுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விக்கிரவாண்டியில் உள்ள சகாய அன்னை தேவாலயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று அங்கு பிரார்த்தனை முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை