தமிழக செய்திகள்

ஆடி 2-வது சனிக்கிழமை; திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நீண்ட வரிசைகளில் பக்தர்கள் வழிபாடு

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

காரைக்கால்,

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். சனிப்பெயர்ச்சி நடைபெறும் போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆடி மாதம் 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் புதுச்சேரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.

பல மாதங்களுக்குப் பிறகு திருநள்ளாறு கோயிலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதலாகவே சாலையில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என இரண்டு வகையான தரிசனத்திற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடு காரணமாக சனீஸ்வர தீர்த்த குளமான நளன் தீர்த்தத்தில் பொதுமக்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து