மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு தீபாராதனை, அதைத்தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவது, பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடந்தது. மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து யானை மீது சந்தனக்குட ஊர்வலம் பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைகிறது. 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசையும், 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், பகல் 12 மணிக்கு யானை மீது களப பவனியும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்ற மகா பூஜை நடைபெறுகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குமரி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.