சென்னை,
தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். காரில் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது பற்றி புகார் கொடுக்க விடாமல் இன்னொரு சூப்பிரண்டு ஒருவர் மூலமாக தொல்லை கொடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டார். இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் கூறப்பட்ட சிறப்பு போலீஸ் டி.ஜி.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.யை பணி இடைநீக்கம் செய்வதோடு, கைது செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று டி.ஜி.பி.அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினார்கள்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் 11 பேர் நேற்று மாலை டி.ஜி.பி. திரிபாதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். பாலியல் புகார் கூறிய பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக நியாயமான, விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், டி.ஜி.பி.யிடம் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் வலியுறுத்தியதாக தெரிய வந்துள்ளது. சி.பி.ஐ.விசாரணை கேட்டும், அவர்கள் வற்புறுத்தியதாக தெரிகிறது.