மும்பை,
துணை முதல்-மந்திரி அஜித்பவார் தனியார் குட்டி விமான விபத்தில் உயிரிழந்தார். விமான விபத்தின் கடைசி நிமிடங்களில் நடந்தவை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித்பவார் பயணித்த வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘லியர் ஜெட் 45' விமானம் நேற்று காலை 8.18 மணியளவில் மும்பையில் இருந்து பாராமதி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டது. அப்போது அந்தப்பகுதியில் பலத்த பனிமூட்டம் காரணமாக பார்வைத்திறன் குறைவாக இருந்துள்ளது.
இந்த நிலையில் காலை 8.40 மணி அளவில் விமானிகள் விமானத்தை தரையிறக்க ஓடுதளத்தை தேடியுள்ளனர். முதலில் ஓடுதளம் சரியாக தெரியாததால், ‘கோ-அரவுண்ட்' எனப்படும் தரையிறங்காமல் மீண்டும் மேலே எழும்பும் முறையை மேற்கொண்டனர்.
காலை 8.43 மணி அளவில் சிறிது நேரத்திற்கு பிறகு, ஓடுதளம் தெரிகிறது என விமானிகள் தகவல் அளித்தனர். அதன்பின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தரையிறங்க அனுமதி வழங்கியது.
வழக்கமாக அனுமதி கிடைத்தவுடன் விமானிகள் அதனை உறுதிப்படுத்தி மீண்டும் பதில் அளிக்கவேண்டும். ஆனால், இந்த முறை விமானிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் காலை 8.44 மணிக்கு, அதாவது அடுத்த ஒரு நிமிடத்திலேயே ஓடுதளத்தின் அருகே விமானம் தீப்பிடித்து எரிவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கண்டனர்.
விபத்துக்குள்ளான இந்த விமானம் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தான் தணிக்கை செய்யப்பட்டு, பறப்பதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற விமானி இசான் காலித் கூறியதாவது:-
பாராமதியில் சிறிய ஓடுபாதை தான் உள்ளது. ஆனால் லியர் ஜெட் விமானத்தை தரையிறக்க அந்த ஓடுதளம் போதுமானதாக இருக்கும்.
பாராமதி ஓடுபாதையில் `இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் ' கிடையாது. `இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம்' அல்லது மோசமான வானிலை நேரத்தில் விமானியை முறையாக வழிநடத்தும் அமைப்பு இருந்து இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்கமுடியும். முழுமையான விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
`இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம்' (ஐ.எல்.எஸ்) என்பது மோசமான வானிலை, மூடுபனி அல்லது இரவில், விமானிகள் ஓடுபாதையை சரியாக கண்டு பாதுகாப்பாக தரையிறங்க வழிகாட்டும் அமைப்பாகும்.