குயிட்டோ,
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடார் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மொரோனா சாண்டியாகோ மாகாணத்தின் சுகுவோ நகரில் இருந்து பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் ஹூவாம்பி நகரில் உள்ள மக்காஸ்-லோஜா நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை நிறுத்த எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.
இதை தொடர்ந்து, பஸ் சாலையை விட்டு விலகி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த சக வாகன ஓட்டிகள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் 25 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
பஸ் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.