பார்சிலோனா,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கேட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, கேட்டலோனியாதான். ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் செய்கிறது. ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கேட்டலோனியாவின் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் இந்த மாகாணத்துக்குப் போகிறது.
ஸ்பெயினில் இருந்து தனிநாடாக பிரிந்து செல்ல கேட்டலோனியாவில் குரல்கள் வலுத்தன. இதையடுத்து, ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த அந்த மாகாண அரசு முடிவு செய்தது. ஆனால் இதை ஸ்பெயின் அரசு அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டும் அங்கீகாரம் தரவில்லை. அதை மீறி இம்மாத தொடக்கத்தில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பொதுவாக்கெடுப்பை முறியடிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை அமைதியான முறையில் எதிர்க்குமாறு தனிநாடு ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
வாக்கு எண்ணிக்கையில் 90 சதவித மக்கள் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர் என கேட்டலோனியா தனிநாடு ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 42 சதவித வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஓட்டெடுப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டது, அப்படியொரு வாக்கெடுப்பு நடைபெற வில்லை என ஸ்பெயின் கூறியது.
கேட்டலோனியா அரசின் நடவடிக்கையினால் ஸ்பெயினில் கடும் விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், ஸ்பெயின் அரசின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என தெரிவித்த கேட்டலோனியா பிரதமர் கார்லஸ், கேட்டலோனியா விடுதலை பிரகடனத்தில் மட்டும் கையெழுத்திட்டார். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது.
ஆனால், கேட்டலோனியாவின் சுதந்திர பிரகடனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கேட்டலேனியா பாராளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார். டிசம்பர் 21 ஆம் தேதி பிராந்திய தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் இயல்பு நிலை திரும்பும் வகையில், கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.