மதுரை,
மதுரை அருகே உள்ள அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் நேற்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி காலையில் இருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மூலவர் சுவாமிகள், உற்சவர் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியருக்கு சிறப்பு பூஜைகள், பட்டர்களின் வேதமந்திரங்களுடன் தீபாராதனைகள் நடந்தன.
தொடர்ந்து பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலிலும் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். இக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், காலையிலும், மாலையிலும் பக்தர்கள் வரிசையாக சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.