ஆனால், "கர்த்தர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் ஆனவர்". கர்த்தர் எந்த மனிதனையும் எந்த சூழ்நிலையில் இருந்தும், உயர்த்துகிறவராய் இருக்கிறார்.
இதற்கு உதாரணமான நிகழ்வுகளை வேதாகமத்தில் காண்போம்.
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், ஒரு சாதாரண மனிதர். அவர் ஒருநாள் தன்னுடைய வீட்டிலிருந்து காணாமல் போன கழுதைகளை தேடி, வனாந்தரத்தில் அலைந்து திரிகிறார். அப்போது, இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்தும், கர்த்தருடைய தீர்க்கதரிசி சாமுவேலை பார்க்கச் செல் கிறார்.
சவுல் வருவதற்கு முந்தின நாளே சாமுவேலிடம் கர்த்தர், 'நாளைக்கு காணாமல் போன கழுதைக்காக உன்னிடத்தில் ஜெபிக்க சவுல் என்பவன் வருவான். அவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிசேகம் செய்' என்று கூறுகிறார்.
அவ்வாறே சவுல் சாமுவேலைப் பார்க்க வருகிறார். வந்த இடத்திலே சாமுவேலால் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுகிறார். கழுதைகளைத் தேடிச்சென்ற சாதாரண சவுல், இஸ்ரவேலின் முதல் ராஜாவாக உயர்த்தப்படுகிறார்.
அவர் ராஜாவாக இருக்கும் போது கர்த்தருடைய கட்டளைகளின் படி ஆட்சி செய்யாமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். இதனால் கடவுள், அவரை ஆட்சியில் இருந்து நீக்குகிறார்.
அதன்பிறகு கர்த்தர் சாமுவேலிடம், 'நீ பெத்தலேகமுக்கு போய் அங்கே ஈசாயின் குமாரனில் ஒருவனை இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்' என்று கூறுகிறார். இதையடுத்து கர்த்தருடைய ஊழியக்காரர் சாமுவேல் பெத் தலேகமுக்கு வருகிறார். அங்குள்ள மக்களையும், ஈசாயையும், அவனுடைய மகன்களையும் அழைத்தார். அனைவரும் வந்தனர். அவர்களிடம் கர்த்தரின் கட்டளையைக் கூறுகிறார்.
முதலில் ஈசாயையின் மூத்த மகன் எலியாவை சாமுவேல் பார்த்து, 'கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவனாக இருக்குமோ?' என்று கருதுகின்றார்.
அப்போது கர்த்தரோ சாமுவேலை நோக்கி, 'நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். நான் இவனை புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிற படி நான் பார்க்க மாட்டேன். மனுஷன் முகத்தை பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார்' என்றார்.
பின்னர், ஈசாயை தனது மகன்களில் ஏழு பேரை வரிசையாக சாமுவேலிடம் அறிமுகப்படுத்துகிறார். சாமுவேல் ஈசாயிடம் "கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்து கொள்ளவில்லை" என்று சொல்லி, "உன் பிள்ளைகள் இவ்வளவு தானா?" என்று ஈசாயிடம் கேட்கிறார்.
அதற்கு அவர், 'எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்' என்றான். சாமுவேல் உத்தரவுப்படி உடனே ஆள் அனுப்பி அவனை வரவழைக்கிறார்கள்.
அப்போது கர்த்தர் சாமுவேலிடம் இவன்தான், "நீ எழுந்து இவனை அபிஷேகம் செய்" என்கிறார். பின்னர் எல்லோருக்கும் மத்தியில் தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுகிறார்.
இஸ்ரவேல் தேசத்தின் பிரபலமான ஒரு மனிதர் அந்த ஊருக்கு வருகிறார். பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. மொத்த ஊர் ஜனங்களும், ஈசாயின் எல்லா பிள்ளைகளும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் இளையவரான தாவீது புறக்கணிக்கப்படுகிறார். ஆனால் கர்த்தர் அவரையே எல்லா கண்களுக்கும் முன்பாக ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார். இந்த தாவீது தான் இஸ்ரவேலின் வரலாற்றிலே மிகவும் பிரபலமான மன்னர் ஆவார்.
வேதம் கூறுகிறது; "கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஐஸ்வர்யம் அடைய பண்ணுகிறவருமாய் இருக்கிறார். அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்". (1 சாமுவேல் 2:7,8).
அன்பான நண்பர்களே, இன்றைக்கு நாமும் சக மனிதர்கள், உறவினர்கள், நண்பர்கள், சொந்த ஊர் மக்கள், இன்னும் நம் குடும்பத்தினரால் அற்பமாக எண்ணப்படலாம், நடத்தப்படலாம், புறக்கணிக்கப்படலாம். இதற்காக கவலைப்படாதீர்கள், கர்த்தர் உங்களையும் ஒரு நாள் எல்லோருடைய கண்களும் ஆச்சரியப்படும்படி நிச்சயமாக உயர்த்துவார்.
நெல்லை மானக்சா.