மும்பை,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். இவர் பேட்டிங் ஜாம்பவான்களாக கருதப்படும் சச்சின், லாரா, பாண்டிங் போன்ற முன்னணி வீரர்களுக்கு தனது மின்னல் வேக பந்துவீச்சின் மூலம் கடும் அச்சுறுத்தலாக இருந்தவர்.
தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமான பந்தை வீசிய வீரர் என்ற பெருமை அக்தரை சேரும். இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் அக்தர் குறித்து பேசியுள்ளார்.
அக்தரின் அச்சுறுத்தலான பந்துவீச்சு பாணி குறித்து சேவாக் கூறுகையில், " நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட், தான் நான் எதிர்கொண்ட மிகக் கடினமான பந்துவீச்சாளர். நான் எதிர்கொண்ட இரண்டு வேகமான பந்துவீச்சாளர்கள் என்றால் அது நிச்சயம் பிரெட் லீ மற்றும் அக்தர் தான்.
பிரெட் லீ-யை எதிர்கொள்வதற்கு நான் ஒருபோதும் பயந்தது இல்லை. ஆனால் அக்தரின் பந்தை நான் 2 முறை பவுண்டரிக்கு விரட்டினால் அடுத்து அவர் என்ன செய்வார் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஒரு பீமர் அல்லது யார்க்கர் பந்தை அவர் அடுத்து வீச வாய்ப்புள்ளது." என சேவாக் தெரிவித்தார்.