நாக்பூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. என்றாலும் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்ட இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்த முகவும் முயற்சி செய்தனர். வலுவடையும் நிலையை நோக்கிய பிஞ்ச் - டேவிட் வார்னர் கூட்டணியை பாண்டியா உடைத்தார். 11.3 வது ஓவரில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் தன்னுடைய முதல் விக்கெட்டை இழந்தது. பிஞ்ச் 32 ரன்களில் வெளியேறினார். பின்னர் வார்னருடன், சுமித் கைகோர்த்தார். சுமித்தை 16 ரன்களில் ஜாதவ் வெளியேற்றினார்.
வார்னர் மட்டும் நிதானமான ஆட்டம் மூலம் அணிக்கு வலுசேர்க்க முயற்சி செய்தார், அவருடைய முயற்சிக்கு அக்ஷர் படேல் முற்றுப்புள்ளி வைத்தார். 22.2 வது ஓவரில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். 24.2 வது ஓவரிடலும் அக்ஷர் படேல் மற்றொரு விக்கெட்டை எடுத்து இந்திய ரசிகர்களை மகிழ்வித்தார். ஹேன்ட்ஸ் கோம்ப் 13 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து டிராவிஸ் ஹெட் (15 ரன்கள்) மற்றும் ஸ்டோனிஸ் (10 ரன்கள்) பேட்டிங் செய்து விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா 30.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 141 ரன் களுடன் விளையாடி வருகிறது.