கிங்ஸ்டன்,
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷாப் பண்ட் (27 ரன்), ரவீந்திர ஜடேஜா (16 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும், ஹனுமா விஹாரியும், இஷாந்த் ஷர்மாவும் கூட்டணி போட்டு அமர்க்களப்படுத்தினர். பவுலரான இஷாந்த் ஷர்மா கொடுத்த குடைச்சலில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் நொந்து போனார்கள்.
மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய ஹனுமா விஹாரி தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து இஷாந்த் ஷர்மா தனது முதலாவது அரைசதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 414 ரன்களாக உயர்ந்த போது இஷாந்த் ஷர்மா (57 ரன், 80 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார். 8-வது விக்கெட்டுக்கு விஹாரி-இஷாந்த் ஜோடி 112 ரன்கள் (172 பந்து) திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து வந்த ஷமி (0) டக்-அவுட் ஆனார். இதன் பின்னர் கடைசி விக்கெட்டாக ஹனுமா விஹாரி (111 ரன், 225 பந்து, 16 பவுண்டரி) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.
முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், கார்ன்வால் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திணறடித்தார். புற்களுடன் கூடிய இந்த ஆடுகளத்தில் அவரது கட்டுக்கோப்பான ஸ்விங் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மிரண்டு போனார்கள். டாப்-5 பேட்ஸ்மேன்களும் அவரது பந்து வீச்சுக்கு இரையானார்கள். இதில் டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி பும்ரா ஹாட்ரிக் சாதனை படைத்ததும் அடங்கும்.
ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஹெட்மயர் (34 ரன், 57 பந்து, 7 பவுண்டரி) முகமது ஷமியின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 87 ரன்களுடன் தத்தளித்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ-ஆனை வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மயங்க் அகர்வால் 4 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 19 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது புஜாரா 19 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 6 ரன்னுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 416 ரன்
வெஸ்ட் இண்டீஸ்
கிரேக் பிராத்வெய்ட் (சி) பண்ட்
(பி) பும்ரா 10
கேம்ப்பெல் (சி) பண்ட்
(பி) பும்ரா 2
டேரன் பிராவோ (சி) ராகுல்
(பி) பும்ரா 4
புரூக்ஸ் எல்.பி.டபிள்யூ
(பி) பும்ரா 0
ரோஸ்டன் சேஸ் எல்.பி.டபிள்யூ
(பி) பும்ரா 0
ஹெட்மயர் (பி) ஷமி 34
ஹோல்டர் (சி) சப் (ரோகித்
சர்மா) (பி) பும்ரா 18
ஜமார் ஹாமில்டன் (சி) கோலி
(பி) இஷாந்த் 5
ரகீம் கார்ன்வால் (சி) ரஹானே
(பி) ஷமி 14
கெமார் ரோச் (சி) அகர்வால்
(பி) ஜடேஜா 17
கேப்ரியல் (நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 13
மொத்தம் (47.1 ஓவர்களில்
ஆல்-அவுட்) 117
விக்கெட் வீழ்ச்சி: 1-9, 2-13, 3-13, 4-13, 5-22, 6-67, 7-78, 8-97, 9-117
பந்து வீச்சு விவரம்
இஷாந்த் ஷர்மா 10.5-3-24-1
பும்ரா 12.1-3-27-
முகமது ஷமி 13-3-34-2
ஜடேஜா 11.1-7-19-1
இஷாந்த் ஷர்மாவின் அரைசதம்
92-வது டெஸ்டில் விளையாடும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா 126-வது இன்னிங்சில் தனது முதலாவது அரை சதத்தை (57 ரன்) எட்டியிருக்கிறார். முதலாவது அரைசதத்தை அடிக்க அதிக இன்னிங்ஸ் எடுத்துக் கொண்ட வீரர்களில் இஷாந்த் ஷர்மா 2-வது இடம் வகிக்கிறார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது முதலாவதுஅரைசதத்தை கடப்பதற்கு, 130 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டதே இந்த வகையில் முதலிடத்தில் உள்ளது.