

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கிவருகிறார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் போகன் மற்றும் பூமி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை கொண்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ‘இப்படத்தின் ‘பிரோக்பாய்’ வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது.
‘லவ் ஓ லவ்’ படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லரை அனிருத் ச்மீபத்தில் வெளியிட்டார். இப்படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய கஸ்தூரிராஜா “பவிஷை உருவாக்கியவர் தனுஷ். தனுஷின் வார்ப்பு தான் பவிஷ். நான் அவரை அறிமுகப்படுத்தினேன், அந்தப் படம் ஹிட்டானது. அடுத்தாக அவரை வைத்து `ட்ரீம்ஸ்' என்ற படத்தை இயக்கினேன். ஏனென்றால் அறிமுகப்படுத்துவது மட்டும், வாய்ப்பு தருவது மட்டும் போதாது. தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் படத்தை முடித்த பின் தனுஷுக்கு நான் ஒரே அறிவுரை தான் கூறினேன். உன் இயக்குநரோ, தயாரிப்பாளரோ ஷாட் எடுக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் சொன்ன நேரத்துக்கு நீ சென்றுவிடு என்றேன். அதை இன்று வரை தனுஷ் பின்பற்றுகிறார்.
எனது முதல் மகன் செல்வராகவன், முதல் பேரன் பவிஷ். இந்தப் படத்துக்காக பவிஷ் கடினமாக உழைத்திருக்கிறார். தனுஷும் அப்படி உழைத்தவர்தான். துள்ளுவதோ இளமை முடிந்ததும், காதல் கொண்டேன் படத்துக்காக செல்வராகவனிடம் தனுஷை ஒப்படைத்தோம். பின்னர் அந்த பொறுப்பை சுப்ரமணியம் சிவா எடுத்துக் கொண்டார். தனுஷை ஹீரோவாக வடிவமைத்ததே அவர் தான். அவரும் தன்னை வளர்த்து கொண்டார். நீயும் அப்படி உன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.