

சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் பிரத்யேக சரக்கு ரெயில் பாதை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. புதிதாக 7 அதிவேக ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் திட்டமும் போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கியமான படியாகும். சென்னை - பெங்களூரு மற்றும் ஐதராபாத் - சென்னை இடையே அதிவேக ரெயில் பாதை அமைப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். செமி மின்னணுவியல் வளர்ச்சி திட்டம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் கொண்டது.
நகரங்களை ஒட்டி உற்பத்தி மையங்களை உருவாக்க ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமாகும். பால் உற்பத்தி மற்றும் கோழி வளர்ப்பு, தேங்காய் உற்பத்தி தொடர்பான திட்டங்கள் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அடுத்த ஆண்டுகளில் 20 புதிய நீர்வழிப் பாதைகள் அமைக்கப்படும் திட்டமும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு பயனளிக்கும் முக்கியமான முயற்சியாகும்.
வாரணாசி - பாட்னா நதி போக்குவரத்து இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. தென் மாநிலங்களின் நீர்வள தேவைகள் மற்றும் வேளாண் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்படாதது கவலைக்குரியது. இளைஞர்களுக்கான தொழில் சார்ந்த, நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பெரிய அளவிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வேலை இழப்பு பிரச்சினையை சமாளிக்கக்கூடிய தொழிற்துறை முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் பற்றிய தெளிவான அறிவிப்புகள் இல்லாதது இளைஞர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான கடல்சார் மாநிலங்களில் ஒன்றாகும். இந்நிலையில், கடல் வழி போக்குவரத்து, வணிகம், மீன்வள வளர்ச்சி மற்றும் துறைமுக சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறதாது ஏமாற்றமளிக்கின்றது. அதேபோல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் அறிவிக்கப்படாதது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு சுமையாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி பல்வேறு வகைகளில் விலைவாசி உயர்வை தூண்டி வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு தினந்தோறும் குறைந்து கொண்டே இருக்கும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் தங்கம், வெள்ளி போன்ற அத்தியாவசிய முதலீட்டு உலோகங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பு இல்லை. இந்நிலை நாட்டின் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது. ஜிஎஸ்டி போன்ற வரிகளை குறைத்து, மக்களுக்கு சுமையில்லாத, வலி இல்லாத ஒரு பட்ஜெட்டாக இருந்திருக்கலாம். மொத்தத்தில் இந்த பட்ஜெட் "யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.