

கோடம்பாக்கம்,
சென்னை கோடம்பாக்கம் தாஸ்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகநாதன் மகனான திலீபன் ஏ.சி.மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார்.
சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்துவந்த அவர் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். தந்தை விபத்தில் சிக்கி வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் பகலில் ஏ.சி.மெக்கானிக்காகவும், இரவு நேரத்தில் அவரது ஆட்டோவை ஓட்டியும் குடும்பத்தை கவனித்து வந்தார்.
இதனால் இவரது வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வந்தது. திலீபனின் சகோதரி தீபா திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக திலீபன் காதலித்து வந்த பெண்ணின் வீட்டில் சென்று பேசி அவரது குடும்பத்தினர் அவருக்கு கடந்த 17-ந் தேதி திருமணநிச்சயம் செய்தனர்.
காதலியை மணமுடித்து விட்டு குடும்பத்தையும் விரைவில் நல்ல நிலைக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் தனது ஏ.சி. மெக்கானிக் வேலையில் பரபரப்புடன் ஈடுபட்டு இருந்தார். கோடம்பாக்கம் வரதராஜ பேட்டையில் உள்ள ஏ.சி. குடோன் ஒன்றுக்கு சென்று கியாஸ் நிரப்பும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார். இந்த நேரத்தில் தான் அந்த விபரீதம் நடந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் திலிபனின் இரு கைகளும் துண்டாகி தூக்கி வீசப்பட்டன.
இதனால் அலறி துடித்த திலீபனை அங்கிருந்தவர்கள் மீட்டு துண்டிக்கப்பட்ட கைகளையும் பத்திரப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 கைகளையும் ஒட்ட வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. இதனால் ஏ.சி. மெக்கானிக் வேலையில் சுறுசுறுப்போடு செயல்பட்ட திலீபன் இப்போது தனது 2 கைகளையும் இழந்து மிகவும் பரிதாப நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது குடும்பத்தினர் மகனின் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தப்படி இனி என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலையில் மூழ்கி இருக்கிறார்கள்.
திருமணம் நிச்சயமான நிலையில் தனது காதலனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று திலீபன் காதலித்த பெண்ணும் ஆஸ்பத்திரியில் கண்ணீரூடன் கலங்கி நிற்கிறார். திலீபனின் குடும்பத்தினர் அவரது வருமானத்தையே நம்பி வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு பேரிழப்பாகவே உள்ளது. எனவே தமிழக அரசு உரிய உதவி மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர் திலீபனுக்கு இனி செயற்கை கைகள் பொறுத்தப்பட்டாலும் முன்பு போன்று தனது பணிகளை செய்ய முடியாது. அதே நேரத்தில் செயற்கை கைகளை பொறுத்துவதற்கு பெரும் செலவாகும் என்பதாலும் என்ன செய்வது என்று புரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.
மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்ற நம்பிக்கையோடு திலீபனின் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.