தமிழகத்தில் "காற்றில் பறக்கும் சட்டம் ஒழுங்கு" - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

சிவகங்கை இரட்டைக் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சிவகங்கை இரட்டைக் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சட்டம் ஒழுங்கு

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

Dummy முதல்-அமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

ராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?

‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரட்டைக்கொலை

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com