திருச்சி செவிலியர் மாணவியின் இறப்பிற்கான காரணத்தை சரியாக ஆராய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

மாணவர்களின் உடல் நிலையும் மனநிலையும் கண்காணிக்கப்பட வேண்டும்.
திருச்சி செவிலியர்  மாணவியின் இறப்பிற்கான காரணத்தை சரியாக ஆராய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

திருச்சி,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று காலை என் மனதை பாதித்த ஒரு செய்தி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பின்பு மரணம் அடைந்தார் என்ற செய்தி. உடன் பணி புரிந்து கொண்டிருக்கின்ற மாணவிகளின் கதறல் என்னை நிலைகுலைய செய்தது. ஏனென்றால் செவிலியரோடு பணிபுரிந்தது மட்டுமல்லாமல் அவர்கள் பணியில் சந்திக்கும் சவால்களையும் சந்தித்தவர்கள் நாங்கள், ஆக காலையில் இந்த சக மாணவி உயிரிழப்பு இந்த மாணவிகளின் உணர்வுகளை எவ்வளவு நிலைகுலை செய்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தவறு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அந்த செவிலிய மாணவி மூச்சுத் திணறல் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று செய்தி சொல்கிறது. உண்மை என்ன என்று எனக்கு தெரியவில்லை.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கே இதை போல் நிகழ்வுகள் நடக்கும் பொழுது அது மக்களின் நம்பிக்கையையும் நிலைகுலைய செய்யும் என்ற வகையில் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாணவியின் இறப்பிற்கான காரணத்தை சரியாக ஆராய வேண்டும் அந்த மாணவி குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். நான் தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றவுடன் முதல் துணைவேந்தரின் கூட்டத்தில் அனைத்து மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும்,சுகாதார கோப்பு தயாரிக்கப்பட வேண்டும் அவர்களின் உடல்நிலை சரியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்ற ஒரு குறிப்பு கொடுத்தேன். இன்று கல்வி நிறுவனங்களுக்கு நான் ஒரு ஆலோசனையாகவே சொல்கிறேன். ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் அவர்கள் உடல் நிலையை பற்றிய ஒரு கோப்பு தயார் செய்து எப்படி அவர்கள் கல்வி கண்காணிக்கப்படுகிறதோ அதேபோல அவர்கள் உடல் நிலையும் மனநிலையும் கண்காணிக்கப்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இது மிக முக்கியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com