கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்-தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்-தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Published on

புதுக்கோட்டை,

கிறிஸ்துமஸ் விழா

ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் மாதம் 25-ந் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கு தந்தை சவரிமுத்து திருப்பலி நடத்தினார்.

நள்ளிரவு 12 மணி ஆனதும் ஏசு பிறந்ததை குறிக்கும் வகையில் மாட்டுத்தொழுவம் போன்ற குடிலில் ஏசு பாலன் சொரூபம் வைக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் அந்த குடில் ஜொலித்தன. ஏசு கிறிஸ்துவின் பாடல் ஒலிக்க, சிறுவர், சிறுமிகள் குடில் வளாகத்தில் நடனமாடினர்.

வாழ்த்துகள் பரிமாற்றம்

ஏசு பாலன் பிறப்பை குறிக்கும் வகையில் சொரூபத்தை பங்கு தந்தை தூக்கி காண்பித்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் வணங்கினர். தொடர்ந்து கிறிஸ்தவ பாடல் பாடப்பட்டு, வசனங்கள் கூறி பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகள் மற்றும் கேக் வழங்கி மகிழ்ந்தனர். இதேபோல சில தேவாலயங்களில் நேற்று காலையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வீடுகளில் பலர் குடில்கள் அமைத்தும், மின் விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். பண்டிகையை கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

அன்னவாசல்

அன்னவாசல், இலுப்பூர், மகுதுப்பட்டி, சாத்தம்பட்டி, உடையான்பட்டி, தாண்றீஸ்வரம், மாதாகோவில், மாங்குடி, வயலோகம், பெருஞ்சுனை, இரும்பாளி, பொம்மாடிமலை, அம்மாசத்திரம், பசுமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. தேவாலயங்களில் ஏசுவின் பிறப்பை அறிவிக்கும் வகையிலான குடில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வண்ண விளக்குகள், பூக்களால் தேவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அன்னவாசல் கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு நள்ளிரவு ஆனதும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்வித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com