காளையார்கோவில் வாரச்சந்தை கடைகளில் சோதனை: முத்திரையிடப்படாத தராசு, எடைக்கல், அளவைகள் பறிமுதல்


காளையார்கோவில் வாரச்சந்தை கடைகளில் சோதனை: முத்திரையிடப்படாத தராசு, எடைக்கல், அளவைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Aug 2017 10:00 PM GMT (Updated: 21 Aug 2017 7:12 PM GMT)

காளையார்கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரி அருகே வாரச்சந்தை நடைபெறும்.

காளையார்கோவில்,

காளையார்கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரி அருகே மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள வளாகத்தினுள் வாரச்சந்தை நடைபெறும். இதில் காளையார்கோவில் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காய்கறி, பழங்கள், இறைச்சி உள்ளிட்டவை வாங்கி செல்வார்கள்.

இந்தநிலையில் வாரச்சந்தை கடைகளில் உணவு பொருட்களின் எடையை குறைத்து வழங்கப்படுவதாகவும், கலப்படம் உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மைவிழிசெல்வி தலைமையில், உதவி ஆய்வாளர் சேதுராஜ், காரைக்குடி–தேவகோட்டை உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், திருப்பத்தூர் உதவி ஆய்வாளர் சேதுபதி, சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் வாரச்சந்தை கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வாரச்சந்தை கடைகளில் முத்திரையிடப்படாத 200–க்கும் மேற்பட்ட தராசுகள், எடைக்கற்கள், அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடைகளில் உணவுப்பொருட்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

பின்னர் அதிகாரிகள் கூறும்போது, கடைக்காரர்கள் இனிமேல் இதுபோன்று முத்திரையிடப்படாத தராசுகள், எடைக்கற்கள், அளவைகள் பயன்படுத்துவது, எடையை குறைத்து பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story