தெலுங்கு பட உலகில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி தெலுங்கு சினிமா துறைக்கு நெருக்கமான 11 பேர் உள்பட 30 பேரை கைது செய்தனர்.
போதை பொருள் வழக்கில் ஹவாலா பணம் கைமாறியது தெரிய வந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி தெலுங்கு நடிகைகள் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.
இதையடுத்து நடிகைகள் சார்மி, ரகுல்பிரீத் சிங், டைரக்டர் பூரி ஜெகன்நாத், நடிகர் நந்து ஆகியோர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் சம்மன் அனுப்பி இருந்ததால் அவர் நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன்னால் நேரில் ஆஜரானார்.
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ராணா பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் அஜித் குமாருடன் ஆரம்பம் மற்றும் காடன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.