சென்னை,
தமிழக அரசு கேளிக்கை வரியை 30 சதவீதம் உயர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்த வரி வசூலிக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் அதிபர்கள் போராட்டம் நடத்தினார்கள். பிரச்சினைக்கு தீர்வு காண அரசு தரப்பில் தியேட்டர் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் பிறகு கேளிக்கை வரியை 10 சதவீதம் குறைத்து தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.
கேளிக்கை வரியை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் திரையுலகம் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 6-ந்தேதி முதல் புதிய படங்களை திரையிடுவதில்லை என்று திரையுலகினர் அறிவித்தார்கள்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருந்த 7 படங்கள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதுபற்றி தியேட்டர் அதிபர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். கோவை-நீலகிரி மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
தமிழக அரசு அறிவித்துள்ள சினிமா டிக்கெட் கட்டண உயர்வு, மல்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கு கட்டுப்படி ஆகலாம். தனி திரையரங்குகளுக்கு கட்டண உயர்வு கட்டுப்படி ஆகாது. மல்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கு ஆகும் மின்சார கட்டணம் மற்றும் தொழிலாளர்கள் சம்பளம்தான் தனி திரையரங்குகளுக்கும் ஆகிறது.
அப்படியிருக்கும்போது, இந்த கட்டண உயர்வு எந்தவிதத்தில் நியாயம்? தமிழ்நாடு முழுவதும் தனி திரையரங்குகள்தான் அதிகமாக உள்ளன. ஏறக்குறைய 80 சதவீதம் தனி திரையரங்குகள் உள்ளன. இவை அனைத்தும் மூடப்படும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, டிக்கெட் கட்டணத்தை மேலும் சிறிது உயர்த்தி தர வேண்டும் என்றார்.