மாவட்ட செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தினத்தந்தி

வள்ளியூர்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தை சேர்ந்தவர் தியாகு (வயது 49) விவசாயி. அவருடைய மனைவி கலா (41). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தற்போது நெல்லை மாவட்டம், வள்ளியூர் பூங்காநகரில் வசித்து வருகின்றனர். தியாகுக்கு சொந்த ஊரான சுப்பராயபுரத்தில் விவசாய நிலம் உண்டு. அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். குழந்தை இல்லாததால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தீபாவளியன்று தியாகு வீட்டில் வைத்து மது குடித்து கொண்டு இருந்தார். இதனை கலா சத்தம் போட்டுள்ளார். ஏற்கனவே குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்த தியாகு, வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சேலையை எடுத்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தியாகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை அருகே உள்ள ரோச்மாநகரை சேர்ந்தவர் சூசை இருதய ஜெகன் (வயது 40). தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவருடைய மனைவி மரிய அந்தோணி பிரபா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சூசை இருதய ஜெகன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திசையன்விளை போலீசில், அவருடைய மனைவி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகிரி அம்பேத்கர்நகர் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 36) கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவருடைய மனைவி ராணி (27). இவர்களுக்கு பத்மாஸ்ரீ (11), ஜெயஸ்ரீ (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஜெயராம், ராணி ஆகியோர் புதிய ஜவுளிகள் எடுப்பதற்காக சிவகிரியில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு ராணி தனக்கும், குழந்தைகளுக்கும் விலை உயர்ந்த துணிகளை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராம், சம்பவத்தன்று இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நீ என்னிடம் எதுவும் கேட்காமல் உனது இஷ்டத்திற்கு எவ்வாறு விலை உயர்ந்த துணிமணிகளை எடுக்கலாம்? எனக்கூறி மனைவியை திட்டினாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர்.

நள்ளிரவில் ராணி எழுந்து சமையலறைக்கு சென்றார். அங்குள்ள உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலையில் ஜெயராம், வீட்டில் படுத்திருந்த தனது மனைவியை காணவில்லை என திடுக்கிட்டார்.

பின்னர் வீட்டின் உள்ளே சமையலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ராணி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசில் ஜெயராம் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் ராணியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்