கல்லக்குடி,
ஒகி புயல் மற்றும் கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை, மேலரசூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், சிறுகளப்பூர், அலுந்தலைப்பூர், சரடமங்கலம், கருடமங்கலம், ஊட்டத்தூர், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், மால்வாய், கல்லகம், ஒரத்தூர், முதுவத்தூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான பருத்தி, மக்காசோளம், துவரை மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2 வருடமாக பருவ மழை பொய்த்ததால் மானாவாரி பயிர் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை மானாவாரி பயிர்கள் சாகுபடிக்கு ஏற்ற நேரத்தில் பெய்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நிலத்தை உழுது மானாவாரி பயிர்கள் விதைத்தனர். தொடர்ந்து விளைச்சலுக்கு ஏற்ற நேரத்தில் மழை பெய்து வந்ததால் பருத்தி பயிர்கள் பூ விட்டு காய் விடும் நிலைக்கு வந்தது.
ஒரு சில இடங்களில் மக்காசோள பூ பூத்து கதிர் முற்றும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட பருத்தி செடிகள் சேதம் அடைந்துள்ளன. இதே போல் மக்காசோள பயிர் களும் பாதியிலேயே சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வரகுப்பையை சேர்ந்த விவசாயி தனபால் கூறுகையில், சராசரியாக நிலத்தை உழுது விதை விதைத்து களையெடுக்க 1 ஏக்கர் பருத்திக்கு ரூ.20 ஆயிரமும், மக்காச்சோளத்திற்கு ரூ15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த தொகையை கடன்வாங்கி தான் செய்துள்ளோம். இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தற்போது பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதனால் செலவு செய்த தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மீதம் உள்ள பயிர்களையாவது காப்பாற்றும் வண்ணம் இப்பகுதியில் சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும், முற்றிலும் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.