பல்லடம்,
விளை நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், உயர் அழுத்த மின்சாரத்தை கேபிள் வழியாக கொண்டு செல்ல வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக போராட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது.
மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் உடல்நிலை மோசமாகி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் அனைத்துக்கட்சி சார்பில் 28-ந் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை. ஆனாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் நேற்று காலையில் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் திரண்டனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஜி.பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, புண்ணியமூர்த்தி, கணேஷ், ரவி, த.மா.கா. விடியல்சேகர், முத்துக்குமார், சின்னச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ப.கு.சத்தியமூர்த்தி, பரமசிவம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மணி, ம.தி.மு.க.பாலு, மு.சுப்பிரமணியம், கொ.ம.தே.க. ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் ரங்கசாமி, ஆதித்தமிழர் பேரவை பவுத்தன், பொங்கலூர் வரதராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்தபோலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், எனவே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 60 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.