விழுப்புரம்,
தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரண நிதியை விழுப்புரம் தாலுகாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூரில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த விழுப்புரம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த அன்புபாலன் (வயது 43) என்பவர் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை வருவாய் உதவியாளராக பணியில் இருந்தபோது விபத்து நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாக போலி கணக்கு எழுதி தனது வங்கி கணக்கிலும், தன்னுடைய மனைவி கலைச்செல்வியின் வங்கி கணக்கிலும் வரவு வைத்துள்ளது தெரியவந்தது. இவ்வாறாக ரூ.14 லட்சத்து 10 ஆயிரத்தை அன்புபாலன் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர் அன்புபாலனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துறை ரீதியாக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உத்தரவிட்டார். இந்த கையாடல் குறித்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் அன்புபாலன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று அன்புபாலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.