திண்டுக்கல்:
7 பேர் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று 5 சிறுமிகளுடன், 2 பெண்கள் வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஒரு பெண் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை 7 பேர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டி ஆகியவற்றை பறித்தனர்.
அதோடு ஒரு சிறுமி வைத்திருந்த விஷ பாட்டிலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த எபினேசர் மனைவி அன்னாள் (வயது 36), அவருடைய 3 மகள்கள் மற்றும் அன்னாளின் சகோதரர் மனைவி ஜெமிமா அவருடைய 2 மகள்கள் என்பது தெரியவந்தது.
ரூ.13 லட்சம் மோசடி
மேலும் போலீசாரிடம் அன்னாள் கூறுகையில், நான் வத்தலக்குண்டுவில் பலசரக்கு கடை வைத்துள்ளேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர், பல்வேறு தவணைகளாக ரூ.13 லட்சம் கடனாக வாங்கினார். ஆனால் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வருகிறார். அதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக கூறி கதறி அழுதார். அதைபார்த்து அவருடைய குழந்தைகளும் அழுதன. இதையடுத்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, மனு கொடுப்பதற்கு கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் சிறுமிகள் உள்பட 7 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.