சிவமொக்கா,
மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். செயல்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது சேவையை 3ஜி-யில் இருந்து 4ஜி-யாக மாற்றி வருகிறது. அதன்படி கர்நாடகத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதல் 4-ஜி சேவையின் தொடக்க விழா நேற்று முன்தினம் சிவமொக்காவில் நடந்தது. 4-ஜி சேவைக்கான செல்போன் கோபுரமும் சிவமொக்காவில் அமைக்கப்பட்டிருந்தது.
சிவமொக்கா அம்பேத்கர் பவனில் நடந்த இந்த விழாவில் மத்திய தொலைதொடர்பு துறை மற்றும் ரெயில்வே மந்திரி மனோஜ் சின்கா கலந்துகொண்டு, 4-ஜி சேவையையும், அதற்கான செல்போன் கோபுரத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த விழாவில் அவர் பேசிய தாவது:-
கர்நாடகத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதல் 4-ஜி சேவையின் செல்போன் கோபுரம் சிவமொக்காவில் அமைக்கப்பட்டுள்ளது. அது தற்போது திறக்கப்பட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4-ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடகத்தில் 4 இடங்களில் 4-ஜி சேவையின் செல்போன் கோபுரம் திறக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது உள்கட்டுமானத்தையம், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதுடன், கர்நாடகத்தில் மேலும் 534, 4-ஜி செல்போன் கோபுரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சந்தையில் ஜியோ சேவை வந்த பிறகு மற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே உள்ளனர். அதே நேரத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கணிசமான எண்ணிக்கையில் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதனை மேலும் அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கிராமப்புற பகுதிகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைதொடர்பு வேகத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் மாதத்திற்குள் 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைதொடர்பின் வேகத்தை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.