மாவட்ட செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து மாமூல் தராததால் தொழிலாளர்களை சரமாரியாக வெட்டிய கஞ்சா போதை ஆசாமி

கோயம்பேடு மார்க்கெட்டில் நுழைந்து மாமூல் கேட்டு வியாபாரிகளை சரமாரியாக வெட்டிய கஞ்சா போதை ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள சிபிளாக் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கஞ்சா போதையில் அரிவாளுடன் நுழைந்து, அங்கிருந்த டீக்கடை ஒன்றில் மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

அப்போது அவர் தர மறுக்கவே திடீரென அந்த போதை ஆசாமி கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்ட தொடங்கினார். பின்னர் அந்த நபர் வெறி பிடித்தது போல் கடையின் அருகே படுத்திருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் 3 பேரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் வியாபாரிகளையும் வெட்ட முயன்றதால், அங்கிருந்து அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒட்டு மொத்த வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். அந்த நபருடன் வந்த மற்றொரு நபரை பிடிக்க முயன்றபோது, தப்பியோடி விட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பிடிபட்ட நபரை கத்தியுடன் ஒப்படைத்தனர்.

4 பேர் காயம்

இந்த சம்பவத்தில் காயமடைந்த முருகன் மற்றும் முருகேசன் உள்ளிட்ட 4 பேரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், கஞ்சா போதையில் மாமூல் கேட்டு சரமாரியாக கத்தியால் வெட்டிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், போதையில் தாக்கிய நபர் வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ்(வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது பெரியமேடு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து விசாரிக்கின்றனர். இதுபோல் சில ரவுடிகள் மார்க்கெட்டில் புகுந்து வியாபாரிகள், தொழிலாளிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவமும் அடிக்கடி நடப்பதாகவும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் முறையாக ஈடுபடாததே காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்