ஸ்ரீவில்லிபுத்தூர்,
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் பூட்டிய அறையில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
சொந்த ஜாமீன்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் விஜயநல்லதம்பி.
இவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் அளித்து அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதே போல் ரவீந்திரன் என்பவர் அளித்த பணமோசடி புகாரை தொடர்ந்து, விஜயநல்லதம்பியும் தலைமறைவாக இருந்தார். கடந்த 16-ந் தேதி கோவில்பட்டியில் வைத்து விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து விஜயநல்லதம்பி சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
3 மணி நேரம் வாக்குமூலம்
இந்தநிலையில் விஜய நல்லதம்பி நேற்று, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், வாக்குமூலம் அளிப்பதற்காக நீதிபதி பரம்வீர் முன்பு ஆஜரானார்.
விஜய நல்லதம்பி ரகசிய வாக்குமூலம் அளித்த போது கோர்ட்டு அறையின் கதவுகள் மூடப்பட்டன. அவர் மதியம் 1 மணிக்கு வாக்கு மூலம் அளிக்க தொடங்கினார்.
மாலை 4 மணி வரை வாக்குமூலம் பெறப்பட்டது. அதாவது 3 மணி நேரம் விஜய நல்லதம்பி ரகசிய வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் கோர்ட்டில் இருந்து சென்றார்.