சமுதாயங்கள் போராட்டம்
கர்நாடகத்தில் இடஒதுக்கீடு கேட்டு சில சமுதாயங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன. அதே நேரத்தில் குருபா சமுதாய மக்கள் தங்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறார்கள். வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல, ஒவ்வொரு சமுதாயமும் இடஒதுக்கீடு கேட்டும், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரியும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த போராட்டங்களுக்கு ஆளும் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகத்தில் தற்போது இடஒதுக்கீடு பிரச்சினை தலை தூக்கி உள்ளதால் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தாவணகெரேயில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
நியாயம் கிடைக்க நடவடிக்கை
ஒவ்வொரு சமுதாய மக்களும் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் சரியானது தான். நியாயமான கருத்தை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வால்மீகி, வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின்படி போராட்டம் நடத்துவதற்கும், தங்களது உரிமையை கேட்டு பெறவும் இடம் உள்ளது.
இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து சமுதாய மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன். நான் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.
போராட்டத்தில் அனைத்து சமுதாய மடாதிபதிகளும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அனைத்து சமுதாய மக்களின் இடஒதுக்கீடு
விவகாரம் குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். அனைத்து சமுதாய மக்களுக்கும் நியாயம் கிடைக்க எனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது பற்றி தான் தற்போது ஆலோசிக்கப்படுகிறது. இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடம் உள்ளதா? எந்த அடிப்படையில் வழங்கலாம் என்பது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அனைத்து சமுதாய மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.