பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கந்தாம்பாளையம் பூசாரிக்காடு பகுதியில் செங்கோட்டையன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான அட்டை கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று காலை 8 மணிக்கு இரவு பணி செய்த தொழிலாளர்கள் வெளியே சென்றனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கம்பெனியின் உள்ளே இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அட்டை பெட்டிகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த அட்டை சுருள்களில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. மேலும், அருகில் உள்ள அட்டைகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதனால் சிறிது நேரத்தில் கம்பெனி முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இதுபற்றி தொழிலாளர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சென்னிமலையில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. ஆனால் அட்டைகளில் பயங்கரமாக தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக உள்ளே சென்று தீயை அணைக்க முடியவில்லை.
அவர்கள் வாசலில் நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தனியார் வாகனங்களில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணி நடந்தது. இருந்தாலும் அவர்கள் தீயை அணைக்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பக்கவாட்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 7 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட அட்டை பெட்டிகள், தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட அட்டை சுருள்கள், கருவிகள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.