கடலூர்,
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. என்றாலும் மழை அளவு சராசரியை விட குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக கடலூர், நாகை, காஞ்சீபுரம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.
பின்னர் மீண்டும் நேற்று நள்ளிரவில் 1.30 மணியளவில் பெய்ய தொடங்கிய மழையானது சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல் பலத்த மழையாக பொழிந்தது. அடுத்தடுத்து பெய்த கன மழையின் காரணமாக வழிந்தோடிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்து கொண்டது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவிகள் தேங்கிய மழைநீரிலேயே நடந்து சென்று வர வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்த மழை கடலூர் மட்டுமின்றி காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், அண்ணாமலைநகர், வேப்பூர், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 84 மில்லி மீட்டர், குறைந்தபட்சமாக எஸ்.ஆர்.சி. குடிதாங்கியில் 25 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 47.16 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
1. கடலூர் - 71.60, பெலாந்துறை - 69.40, அண்ணாமலைநகர் - 60, வேப்பூர் - 59, காட்டுமயிலூர் - 57, சிதம்பரம் - 57, கலெக்டர் அலுவலக வளாகம் - 54.80, லால்பேட்டை - 51.20, பரங்கிப்பேட்டை - 49, சேத்தியாத்தோப்பு -48.40, மேமாத்தூர் - 48, வானமாதேவி - 47, கொத்தவாச்சேரி - 46, கீழ்செருவாய் - 45, ஸ்ரீமுஷ்ணம் - 43.10, புவனகிரி - 42, விருத்தாசலம் - 36.20, வடக்குத்து - 34, குப்பநத்தம் -32.20, பண்ருட்டி - 31, குறிஞ்சிப்பாடி - 30, லக்கூர் - 30, தொழுதூர் - 28.