மாவட்ட செய்திகள்

குஜிலியம்பாறை அருகே, வீடு இடிந்து விழுந்து இளம்பெண் பலி

குஜிலியம்பாறை அருகே வீடு இடிந்து விழுந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார். நாய் குட்டிகளை தூக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

குஜிலியம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கருங்கல் ஊராட்சி வேடப்பட்டியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் 40 வீடுகள் உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வீடுகள் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அங்கு குடியிருக்க பயந்து பொதுமக்கள் சிலர் வீடுகளை காலி செய்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் இங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் பாண்டியராஜன் (வயது 30). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கற்பகவள்ளி (27). இவர்களுக்கு அஸ்வின்குமார் (5), பிரேம்குமார் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கற்பகவள்ளியின் வீட்டிற்கு எதிரே உள்ள வீடு ஆட்கள் இல்லாததால் காலியாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேடபட்டியில் மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி வளர்த்து வந்த நாய், எதிரே காலியாக இருந்த வீட்டில் குட்டி போட்டுள்ளது. குட்டிகளின் சத்தம் கேட்டு, அதனை தனது வீட்டுக்கு எடுத்து வருவதற்காக நள்ளிரவு நேரத்தில் கற்பகவள்ளி அங்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி கற்பகவள்ளி அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குஜிலியம்பாறை போலீசார், கற்பகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் ஆதிதிராவிடர் காலனி உள்ளன. இந்த காலனிகளில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. மீண்டும் இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக சேதமடைந்த வீடுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு