தானே,
மராட்டிய மாநிலம் தானே, டின் ஹாத் நாக்கா சந்திப்பு பகுதியில் ஆகாய நடைபாதை உள்ளது. இந்த ஆகாய நடைபாதையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த பெண் ஆகாய நடைபாதையில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகாய நடைபாதையில் இருந்து குதித்து தற்கொலை செய்த இளம்பெண் யார், எந்த பகுதியை சோந்தவர், எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.