நாமக்கல்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நதிநீர் பிரச்சினையில் தீர்வு காணும் நோக்கில் தமிழக மற்றும் கேரள அரசுகள் நடத்த உள்ள பேச்சுவார்த்தை குழுவில் விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். தற்போது தமிழக அரசு அறிவித்து உள்ள குழுவில் விவசாயிகளின் பிரதிநிதிகள் இல்லை. எனவே அந்த குழுவில் விவசாய பிரதிநிதிகளை தமிழக அரசு இடம்பெறச் செய்ய வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தப்போவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் கூறி உள்ளார். உள்ளாட்சிகள் சிறிய அலகுகளாக இருப்பதால், அவற்றை நேரடி மக்கள் ஆட்சி முறையாக அறிவிக்க வேண்டும். ஆரம்ப கல்வி, சுகாதாரம், கால்நடை மேம்பாடு மற்றும் வேளாண்மை போன்ற துறைகளை பழையபடி உள்ளாட்சிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் இடமாக உள்ளாட்சிகள் உள்ளது. அரசியல் கட்சிகளின் தலையீடு, குறிக்கீடு மற்றும் சின்ன ஒதுக்கீடு அந்த தேர்தலில் இருக்கக்கூடாது. மேலும் சிறு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி முதல் மாநகராட்சி மேயர் பதவி வரை சுயேட்சை சின்னங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் நல்லவர்களும், வல்லவர்களும் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு நல்லசாமி கூறினார்.