திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முள்ளிபுரம் காலனியை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 22). இவர் தனது கணவர் கதிரேசன் (25), மகள் நிஷாந்தினியுடன் (2) நேற்று காலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.
போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி வெளியூர் சென்றிருந்ததால் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் ரஞ்சிதா மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு நானும், கதிரேசனும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள். முள்ளிபுரம் காலனியில் குடியிருந்து வருகிறோம். விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகி றோம். இந்தநிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஜானகி, விஜய், சென்னியப்பன் ஆகியோர் சேர்ந்து எங்களை அந்த பகுதியில் குடியிருக்க கூடாது என்று மிரட்டி வருகிறார்கள். அவர்கள் கடந்த 25-ந் தேதி எனது வீட்டுக்குள் புகுந்து எனது கணவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். என்னையும் தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த எனது கணவர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காங்கேயம் போலீசாரிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தோம். ஆனால் அந்த புகாரை ஏற்க மறுத்ததுடன் பொய் புகார் என்று கூறினார்கள். அன்று இரவு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து சென்னியப்பன் உள்ளிட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது காங்கேயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் தெரிவித்த புகாரை அவர் ஏற்கவில்லை. எனக்கும், எனது குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் புகாரை விசாரிக்க வேறு போலீஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், இதுதொடர்பாக வேறு போலீஸ் அதிகாரியை நியமித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.