நாமக்கல்,
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் மகா சங்கல்பம் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.
அதைத்தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சாமி வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், காவடி, இளநீர்காவடி எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராசிபுரம் தர்மசம்வர்த்தனி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழுவின் சார்பில் 31-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 29-ந் தேதி விநாயகர் பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று பாலதண்டாயுதபாணி மற்றும் ஆறுமுக சுப்பிரமணியர் சாமிக்கு அபிஷேகம் நடந்தது. அப்போது பாலதண்டாயுதபாணி சாமி வெள்ளிக்கவச அலங்காரத்திலும், ஆறுமுக சுப்பிரமணிய சாமி சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவையொட்டி சுப்பிரமணிய சாமிக்கும் மற்றும் சண்முகசுப்பிரமணிய சாமிக்கும், வள்ளி-தெய்வாணைக்கும் பிரார்த்தனை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. நேற்று இரவு மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், சண்முக சுப்பிரமணியர் வள்ளி- தெய்வாணையுடன் அலங்கரிக்கப்பட்டு கடைவீதியில் ஊர்வலமாக சென்றனர்.
ராசிபுரம் இ.பி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. பாலமுருகன் சாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. நேற்று கணபதி ஹோமம், அபிஷேகம் நடந்தது. பாலமுருகன் சாமி காவடி ஆட்டத்துடன் திருவீதி உலா நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. இரவு பவுர்ணமி பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோட்டில் உள்ள முருகர் கோவில்களில் நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள செங்கோட்டு வேலவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பால், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை கொண்ட காவடிகளை எடுத்து, மேளதாளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக நடனமாடியபடி ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு நடந்து வந்தனர். அங்கு அவர்கள் செங்கோட்டு வேலவர் சாமியை வழிபட்டனர்.
இதேபோல மலையடிவாரம் ஆறுமுக சாமி கோவில், கைலாசநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட பல்வேறு முருகர் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.
பரமத்தி வேலூர் வட்டம் பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 36-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழாவில் தினந்தோறும் பாலதண்டாயுபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. நேற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மதியம் 1 மணிக்கு அபிஷேக, ஆராதனைகளும், 2 மணிக்கு மகேஸ்வர பூஜையும் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு 7 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) மதியம் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை அன்னை சீதா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், இடும்பர் பூஜையும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருவிடையாற்று பூஜை நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கபிலர்மலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர், பொத்தனூர் பச்சமலை முருகன் கோவில், அணிச்சம்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.
இதேபோல நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முருகர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெண்ணந்தூர் அடுத்த பொன்பரப்பிபட்டி கிராமத்தில் பொன்சொரி மலை அடிவாரத்தில் அமைத்துள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் காவடி எடுத்து ஊர்தண்டல் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் நேற்று காலை காவடி எடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. இதில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த தேர் ஊரை சுற்றி வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது.
இதேபோல் அலவாய்மலை சுப்பிரமணிய சாமிக்கு காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் காவடி எடுத்து அலவாய்மலையை சுற்றி வந்து மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.