பொறையாறு,
நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரை சோழ மண்டல கடலரசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மருத்துவம் குணம் கொண்ட ஓசோன் காற்று வீசுகிறது. இதனால் இந்த மாதங்களில் இந்தியா, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவர். தற்போது பள்ளி களுக்கு கோடை விடுமுறையை யொட்டி சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அப்போது அவர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், கடற்கரையோரம் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடி விடுமுறையை கொண்டாடினர். கடற்கரையையொட்டி அமைந்துள்ள மாசிலாமணிநாதர் கோவிலையும், டேனிஷ் கோட்டையையும் கண்டு ரசித்தனர். மேலும், சீகன்பால்குவால் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் ஆலயம், 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த மசூதி மற்றும் தர்கா உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.