பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னேரி 1952-ம் ஆண்டு பேரூராட்சியாகவும் 1982-ம் ஆண்டு முதல் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியில் பொன்னேரி, திருஆயர்பாடி, பெரியகாவனம், சின்னகாவனம் வேண்பாக்கம் ஆகிய 6 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இந்த பேரூராட்சியில் தற்போது வரை சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, தமிழ்நாடு மீன்வளக் கல்லூரி, 6 அரசு ஆரம்ப பள்ளிகள், 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், நிறுவனங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரி, உதவி இயக்குனர் மீன்வளத்துறை, வேளாண்மை துறை, வேளாண்மைத் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.
மேலும், 10-க்கும் மேற்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அரசு பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் உள்ளது. இங்கு அமைந்துள்ள ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் இடமாக திகழ்கிறது.
இந்தநிலையில், நாள்தோறும் வளர்ந்து வரும் பகுதியாக விளங்கும் பொன்னேரி முதல் தேர்வு நிலை பேரூராட்சியை நகராட்சியாக அரசு தரம் உயர்த்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.