ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியம் ஆட்டரம்பாக்கம் அருகே அல்லிகுழி பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடு உள்ளது. மழை பெய்தால் காடுகளில் உள்ள ஓடைகளின் வெள்ளம் ஆட்டரம்பாக்கம் வழியாக பாய்ந்து ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் கலக்கும்.
ஆட்டரம்பாக்கம் கிராம எல்லையில் உள்ள ஓடையை கடந்துதான் கிருஷ்ணாபுரம், மணமேடு, சாந்துமேடு, அரியத்தூர், நம்பாக்கம், ரங்காவரம், பிளேஸ்பாளையம், அல்லிகுழி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வர வேண்டும். ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது மேற்கூறப்பட்ட கிராம மக்கள் பூண்டி ஏரி ஷட்டர்கள் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் வழியாக தங்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும் போது உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி தண்ணீர் திறந்து விடும் போது தரைப்பாலம் மூழ்கி விடும்.
விரைந்து முடிக்க கோரிக்கை
இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டரம்பாக்கம் மற்றும் கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் வழியாக எங்கும் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டி உள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடபட்ட போது தரைப்பாலம் மூழ்கியது. அதே போல் அல்லிகுழி காட்டு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கிராம மக்கள் 20 நாட்கள் வரை வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு ஆட்டரம்பாக்கத்தில் ஓடை மீது பாலம் அமைக்க வேண்டும் என்று மேற்கூறப்பட்ட கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் திருவள்ளூர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 90 லட்சத்தை வேணுகோபால் எம்.பி. ஒதுக்கினார்.
இந்த நிதியை கொண்டு பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.