வாகன சோதனை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது பள்ளிப்பட்டு பேருராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு வெகுமதிகள், பணம் போன்றவை வழங்குவதை தடுப்பதற்கு பறக்கும் படை அமைக்கப்பட்டது.
பறக்கும் படை அதிகாரி விஜயா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் நேற்று காலை பள்ளிப்பட்டு பேரூராட்சி எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி அதில் சோதனை செய்தனர்.
ரூ.4 லட்சம்
அந்த காரில் பெங்களூருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 43) என்பவர் பயணம் செய்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.4 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பறக்கும் படை அதிகாரி விஜயா கைப்பற்றி பள்ளிப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.
ஈக்காடு
தேர்தல் பறக்கும் படை அலுவலரும், பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான லோகநாதன் தலைமையில், திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சாரதி, போலீஸ் ஏட்டு பிரேமா ஆகியோர் ஈக்காடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி முழுமையாக சோதனை செய்த பிறகே வெளியே செல்ல அனுமதித்தனர். அவர்கள் இந்த வாகனத்தை சோதனை செய்வதை வீடியோ பதிவும் மேற்கொண்டனர். அப்போது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது அந்த காரில் வந்த பேரம்பாக்கம் அருகே உள்ள சின்னமண்டலி கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி பச்சையப்பன் (வயது 39) என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக விவசாயிடம் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பின்னர் அதனை பெற்றுசெல்லுமாறு விவசாயிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் திருவள்ளூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.